Published : 09 Sep 2014 04:11 PM
Last Updated : 09 Sep 2014 04:11 PM

எபோலா பலி 2,079 ஆனது: பாதிப்பை சமாளிக்க உலக நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு

எபோலா நோய் தாக்குதல் அபாயகரமான அளவில் உள்ள நிலையில், அனைத்து நாடுகளும் தன்னார்வு அமைப்புகளும் உதவிகளை அளிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் பிரதமர் பிரான்சிஸ் ஹாலாண்டே, கியூபா அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ, ஐரோப்பிய கவுன்சில் அதிபர் ஹேர்மன் வான் ராம்பூ ஆகியோரை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கையில் மருத்துவ குழுக்களை அனுப்புவது, நிதி உதவி, போக்குவரத்து வசதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு வசதி என அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிகளை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக சினுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய தகவலின்படி, கினியா, லைபீரியா, செனகல், சியேரா லியோனில் எபோலா நோய்க்கு இதுவரை 2,079 பேர் பலியானதாகவும், 3,944 பேருக்கு நோய் தாக்கு இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் மிகவும் எளிதாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், லைபீரியாவின் நிலைமை அனைத்து நாடுகளை விடவும் மோசமாக உள்ளதாகவும், இங்கு வரும் வாரங்களில் புதிதாக 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு எபோலா தாக்க சாத்தியங்கள் அதிக அளவில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லைபீரியாவுக்கு மருத்துவ குழு மற்றும் உபகரணங்களை அனுப்ப முன்வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x