Published : 02 Sep 2014 10:00 AM
Last Updated : 02 Sep 2014 10:00 AM

மும்பை பாணியில் பிரிட்டனில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்: அடுத்த இலக்கு அமெரிக்கா

மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைப் (26/11) போல பிரிட்டனிலும் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு காலத்தில் சிரியா, இராக் நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், இப்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு உலக தலைவர்களும், சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை அது தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்ற பிரிட்டன்வாசிகள், தாயகத்தின் மீதே தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளதாக பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15 எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இது மும்பையில் நடைபெற்ற தாக்குதலைப்போல இருக்கும் எனவும் கூறியுள்ளது.

லண்டன், பர்மிங்ஹாம் அல்லது மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்களை தீவிரவாதிகள் கன்டெய்னர்கள் மூலம் கடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினால் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உலக தலைவர்கள் பதிலடி கொடுக்கத்தவறினால், அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அப்துல்லா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். சிரியா, இராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுப்பது குறித்து ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x