Published : 29 Jan 2019 11:50 AM
Last Updated : 29 Jan 2019 11:50 AM

5 வார்த்தைகளைக் கூறி அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய கமலா ஹாரிஸ்: தாயை நினைவுகூர்ந்து உருக்கம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தனது சொந்த ஊரான ஓக்லாந்தில் தொடங்கினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் (54) கடந்த 21-ம் தேதி அறிவித்தார். அடுத்த 24 மணிநேரத்தில், அவரது தேர்தல் பிரச்சாரத்துக்காக 38 ஆயிரம் பேர் ரூ.10.6 கோடி நன்கொடை வழங்கினர்.

ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர். குறிப்பாக, ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்ஸிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன், சென்னையைச் சேர்ந்தவர். கமலாவின் தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் முதல் ஆப்பிரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் ஆவார்.

இந்நிலையில் தனது முதல்உரையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஓக்லாந்து சிட்டி ஹாலில் சுமார் 20 ஆயிரம் பேர் முன்னிலையில் தொடங்கிய கமலா, ''30 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு வழக்கறிஞராக எனது பணியைத் தொடங்கினேன். முதன்முதலாக நீதிமன்றத்துக்குச் செல்லும்போது ஐந்து வார்த்தைகளைக் கூறினேன். அந்த ஐந்து வார்த்தைகள்  என்னுடைய வாழ்க்கை முழுவதுமான பணியை வழிநடத்துகிறது. அது, கமலா ஹாரிஸ் மக்களுக்காக! (Kamala Harris, for the people) என்பதுதான்'' என்றார்.

அப்போது Kamala Harris, for the people என்ற வார்த்தைகள் திரையில் பெரிதான விரிந்தன. 2020 தேர்தல் முழக்கமாகவும் இதே வார்த்தைகளைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின்  மெக்ஸிகோ சுவரை, அவரின் இடைக்கால தற்பெருமைக்கான திட்டம் என்று கூறிய கமலா, தற்போது அமெரிக்கர்கள் அனைவரும் மாற்றத்துக்கான புள்ளியில் இருப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தனது உரையைத் தொடங்கும் முன், தன்னுடைய தாய் சியாமளா கோபாலன் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், ''என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். 'வெறுமனே உட்கார்ந்து எதைப் பற்றியாவது புகார் சொல்லிக் கொண்டிருக்காதே; எதையாவது செய்' என்பார். அது எனக்கு உத்வேகம் அளித்தது'' என்று நினைவுகூர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x