Published : 24 Jan 2019 12:55 PM
Last Updated : 24 Jan 2019 12:55 PM

அதிபர் கருத்துக் கணிப்பு: அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பில் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரனைப் பின்னுக்குத் தள்ளிய கமலா ஹாரிஸ், முன்னிலை வகித்துள்ளார்.

டெய்லி கோஸ் அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பு நேற்று (புதன்கிழமை) வெளியானது. இதில் பதிவான 28,000 வாக்குகளில் 27 சதவீதத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் 18 சதவீதமும் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் 13 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், 12 % வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் (54) கடந்த 21-ம் தேதி அறிவித்தார்.  அடுத்த 24 மணி நேரத்தில், அவரது தேர்தல் பிரச்சாரத்துக்காக 38 ஆயிரம் பேர் ரூ.10.6 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஹாரிஸ், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர். குறிப்பாக, ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்சிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா, சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x