

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது தொடர்பாக எதிர்க் கட்சிகள் உடனான சந்திப்பில் சுமுக முடிவு கிடைக்காததால் அதிபர் ட்ரம்ப் ’பை பை’ கூறி விடை பெற்று இருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் புதன்கிழமை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பது தொடர்பாக ஜன நாயகக் கட்சியினருடன் புதன்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்தினர் ட்ரம்ப்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில், ” நான் பை பை சொல்லு விட்டேன். நேரத்தை வீணாக்கியதுதான் மிச்சம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஜனநாயக் கட்சி உறுப்பினர் சோக் ஷுமர் கூறும்போது,” ட்ரம்ப் கோபமடைந்து வெளியேறிவிட்டார்” என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடையே நடந்த இந்தத் சந்திப்பு மோசமான தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.
ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால், இந்த நிதியாண்டுக்குச் செலவீனத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக் கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இதனால் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஷட்டவுன் தொடங்கி 3 வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நிலை தொடர்ந்தால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவேன் என்று ட்ரம்ப் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.