மெக்ஸிகோவில் விருந்து நிகழ்ச்சியில் 7 இளைஞர்கள் சுட்டுக்கொலை; மாபியா பின்னணியா?

மெக்ஸிகோவில் விருந்து நிகழ்ச்சியில் 7 இளைஞர்கள் சுட்டுக்கொலை; மாபியா  பின்னணியா?
Updated on
1 min read

மெக்ஸிகோவில் கடலோர ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த 7 இளைஞர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இதற்குப் பின்னால் மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் மாபியா பின்னணி இருக்குமென்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து மெக்ஸிகோவின் க்வின்டானா ரூ மாநில அட்டானி ஜெனரல் அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்த விவரம்:

''மெக்ஸிகோவின் கடற்கரையோர தீபகற்பப் பகுதியின் ரிசார்ட் நகரமான கான்கன்னில் இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது. மெக்ஸிகன் கரிபீயன் எனப்படும் ரிசார்ட்டில் விடிய விடிய விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் திடீரென அடையாளம் தெரியாத சில நபர்கள் துப்பாக்கிகளோடு உள்ளே நுழைந்தனர்.

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 இளைஞர்களை சுட்டுக்கொன்றுவிட்டு இந்நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த நபர்கள் அருகிலுள்ள பகுதியிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தனர். துப்பாக்கித் தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் தேடி வருகிறது.

அநேகமாக போதை மருந்துக் கடத்துதல் தொடர்பாக இக்கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிப்படுகிறது''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்ஸிகோவின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்படும் போதை மருந்து வியாபாரத்தை யார் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவது என்பது தொடர்பாக போட்டி நிலவுகிறது.

இதில் ஜாலிஸ்கோ நியூவ்வா ஜெனரேசியன் கார்டெல் என்ற மாபியா கும்பலுக்கும் லாஸ் ஜெடாஸ் கார்டெல் என்ற மாபியா கும்பலுக்கும் இன்னும் சில கும்பல்களுக்கும் இடையிலான போட்டியினால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் பலநேரங்களில் போர்க்களமாகவே மாறிவருவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in