

அமெரிக்காவில் எல்லைப் பகுதியில் பாதுகாப்புச் சுவர் எழுப்பும் பொருட்டு, நாடாளுமன்றம் நிதி ஒதுக்குவதற்காக அந்நாட்டின் அபதிர் டிரம்ப் கொண்டுவந்த மசோதா தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 5 மில்லியன் (570 கோடி டாலர்) டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது இக்கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர்.
இதனால் நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க அதிபர் மறுத்து விட்டார். எனவே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் ஊழியர்களுக்கு சம்பளம் உட்பட செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அரசுத் துறை செயலிழந்தன. லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா நாடாளுமன்ற செனட் சபையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் எல்லைச் சுவர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான சட்டம் இயற்றப்பட வாக்கு எண்ணிக்கை 60 தேவைப்படும் நிலையில் இதற்கு 51 வாக்குகள் மட்டுமே இதற்கு ஆதரவு கிடைத்தது. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 47 வாக்குகள் விழுந்தததாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இரண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர், ஆர்கன்சாஸின் டாம் பருட்டன் மற்றும் உட்டாவின் மைக் லீ ஆகியோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை, அதே நேரத்தில் மேற்கு வர்ஜீனியாவின் ஜனநாயக செனட்டர் ஜோ மாஞ்சின் ஆதரவு தெரிவிக்கும்விதமாக ''ஆம்'' என்று வாக்களித்தனர்.
எல்லைச் சுவருக்கு நிதியளிக்காமல், அமெரிக்க அரசு தற்காலிகமாக இயங்குவதற்கு ஜனநாயகக் கட்சியால் கொண்டுவரப்படும் ஒரு மசோதா மீது வாக்களிக்க செனட் சபை தொடர்ந்து இயங்க உள்ளது. இதற்கும் 60 வாக்குகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.