

அமெரிக்க அரசு வரலாற்றில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்த அரசுப் பணி முடக்கத்துக்கு அதிபர் ட்ரம்ப் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான பட்ஜெட் ( இதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் எல்லைச் சுவருக்கான ட்ரம்ப்பின் நிதியும் இதில் அடக்கம்) எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை.
இதனால் கடந்த 20-ம் தேதி முதல் அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது. பெரும்பாலான துறைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசியத் தேவைகளுக்கான துறைகள் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் தற்காலிகமாக 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த அரசுப் பணி முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ட்ரம்ப்.
செனட் மற்றும் பிரதிநிகள் சபை இரண்டும் தற்காலிகமாக இந்த அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பான ஒப்பந்தத்திலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ட்ரம்ப் , ''லட்சக்கணக்கான மக்கள் இதன் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அதனை நீக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த முடிவு குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக் ஷுமர் கூறும்போது, ''ட்ரம்ப் பாடம் கற்றுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.