Published : 18 Jan 2019 05:59 PM
Last Updated : 18 Jan 2019 05:59 PM

கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி: செல்போன் பாஸ்வேர்டைத் தர மறுத்ததால் ஆத்திரம்

கணவன் தன்னுடைய செல்போன் பாஸ்வேர்டைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார். மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட கணவர்  2 நாட்களுக்குப் பின் உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

டெடி பூர்னமா (26) மற்றும் இல்ஹம் ஹயானி (25) இருவரும் தம்பதியினர். தங்களின் வீட்டில் இருந்த மேற்கூரையை மேலே ஏறிச் சரிசெய்து கொண்டிருந்தார் டெடி. அப்போது ஹயானி, கணவனின் மொபைலை எடுத்து வந்து அதன் பாஸ்வேர்டைக் கேட்டுள்ளார். பாஸ்வேர்டைக் கூற மறுத்துள்ளார் டெடி.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் மனைவி ஹயானியை அடிக்கக் கீழே குதித்தார் டெடி. அதற்குள்ளாக அருகிலிருந்த பெட்ரோல் கேனைத் திறந்து வீசினார் ஹயானி. உடனடியாக லைட்டரையும் கொளுத்திப் போட்டார்.

உடனடியாக டெடியின் உடலில் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து டெடி மருத்துவமனையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். இந்தோனேசிய மாகாணங்களில் ஒன்றான மேற்கு நூசா தெங்காராவின் வடக்கு லோம்போக் ரிஜென்சியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான ஒஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''வீட்டில் இருந்து  தீப்பிழம்புகள் வெளியேறியதால், உடனடியாக அவர்களின் வீட்டுக்கு ஓடினேன். டெடியும் ஹயானியும் வெளியில் வர உதவி செய்தேன்'' என்றார்.

வடக்கு லோம்போக் காவல்துறை தலைவர் யோகி இதுகுறித்துக் கூறும்போது, ''சம்பவம் நடந்தவுடனே கீராக் மருத்துவமனையில் டெடி அனுமதிக்கப்பட்டார். அவர் உடலின் மேல் பாகம் நெருப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து, சிகிச்சை பலனின்றி டெடி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஹயானி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x