10 ஆண்டு சேலஞ்ச்: பழைய படத்தைப் பகிர்ந்து மனைவிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஒபாமா
பத்து ஆண்டு சேலஞ்ச் என்ற இணையவெளி சவாலில் தனது பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மனைவிக்கு காதலைச் சொல்லியிருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
இணையவெளியில் சமீபத்திய ட்ரெண்ட் #10YearChallenge என்ற சவால்தான். 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் பகிர்ந்து இணையவாசிகள் குதூகலித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் எடுத்த பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, "எனக்கு அன்றும் தெரியும் இன்றும் அதை சொல்வேன் உன்னைப் போல் ஒருவள் யாருமில்லை என்று.. பிறந்த நாள் வாழ்த்துகள் மிச்செல்ஒபாமா" என ட்வீட் செய்திருக்கிறார்.
அந்தக் காதல் மொழிக்கு பதில் சொல்லிய மிச்செல் ஒபாமா, "பிறந்த நாளன்று சொன்ன காதலுக்கு நன்றி. நானும் உங்களை நேசிக்கிறேன். எனது தெற்கத்தி வேர்களுக்கும், வாழ்க்கையை இனிதாக்கும் துணைவருக்கும், எனது மகள்களுக்கும், கடந்த 55 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒவ்வொரு எதிர்பாரா திருப்புமுனைக்கும் நன்றி சொல்கிறேன். அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்கள் ட்விட்டர்வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் ஒபாமாவின் பழைய புகைப்படம் அழகாக இருப்பதாக வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர், ஒபாமாவை அதிபர் பதவியில் இல்லாததன் வெறுமையை உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
