சீனாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை பெருக்கம் வீழ்ச்சி: வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் ஆபத்து

சீனாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை பெருக்கம் வீழ்ச்சி: வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் ஆபத்து
Updated on
2 min read

சீனாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மக்கள் தொகை பெருக்கம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிகமான மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடும்பத்துக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் விதிமுறைகளால் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2017-ம் ஆண்டு நிலவரப்படி புதிதாக 1.73 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20 லட்சம் குறைவாகும். அதுபோலவே பிறப்பு விகிதம் என்பது 2017-ம் ஆண்டு 1.97 விகிதமாக குறைந்துள்ளது. அதாவது பெற்றோர் இருவருக்கும் சேர்ந்து 1.97 என்ற அளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் நடப்பு மக்கள் தொகையை விடவும் குறைவான விகிதத்தில் குழந்தைகள் பிறந்துள்ளளன.

இந்த சூழலை உணர்ந்து தான் கடந்த 2016-ம் ஆண்டு அங்கு 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்ததாலும், பிறப்பு விகிதம் குறைந்ததாலும் அரசின் அனுமதியுடன் 2வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டது.

இந்த அனுமதி வழங்கப்பட்டபோதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யீ பிக்ஸியான் மற்றும் பீகிங் பல்கலைக்கழக ஆய்வாளர் சூ ஜியான் ஆகியோர் இதுகுறித்த ஆய்வுகளை செய்துள்ளனர்.

குழந்தைகள் எண்ணிக்கை குறைவதால் வயது சார்ந்த, நிலவியல் சார்ந்த பிரச்சினைகள் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் பெரிய அளவில் எழக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் நடுத்தர வயது கொண்ட பெண்களின் எண்ணிக்கை 3.9 கோடி என்ற அளவில் குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், சமூக அமைப்பில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தொகை கட்டுப்பாடு விஷயத்தில் மாற்று திட்டம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சீனாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகை தற்போது 138 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in