

இந்தோனேசியாவின் கொந்தளிப்பான மவுண்ட் மிராபி எரிமலை வெடித்துச் சிதறியதால் அம்மலையிலிருந்து பொங்கிய லாவாக்குழம்பின் நெருப்பு வெள்ளம் 1400 மீட்டர் (4590 அடி) தூரத்திற்கு பாய்ந்தோடியது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜாவா தீவில் மிராபி எரிலை சில நாட்களாக வெடிக்கும் நிலையில் இருந்ததாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவிசார் ஆபத்துத் தடுப்பு மையத் தலைவர் கஸ்பாணி தெரிவித்தார்.
எரிமலை வெடித்தது பற்றி அவர் மேலும் தெரிவித்த விபரம்:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த எரிமலை பொங்கியது.அதன் பிறகு நேற்று மாலையிலிருந்தே எரிமலை பொங்கத் தொடங்கியது. அதிலிருந்து வெளியேறிய லாவாக்குழம்பின் நெருப்பு வெள்ளம் பெருகி ஓடியது.
நேற்று எரிமலை வெடிப்பதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லையே தவிர, மற்றபடி எரிமலைவெடிக்கும் அபாயகரமான 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதி தொலைவுக்கு அப்பால் மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
2,968 மீட்டர் உயரமுள்ள மிராபி எரிமலை, பழங்கால இந்தோனேசிய நகரமான யோக்யாகர்ட்டாவின் அருகே அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள டஜன்கணக்கான எரிமலைகளில் நெருப்பு கனன்றுகொண்டிருக்கும் நிலையில்தான் உள்ளது.
இங்கு, கடைசியாக 2010ல் எரிமலை வெடித்தபோது, இதில் 347 பேர் கொல்லப்பட்டனர்.இந்தோனேசியா தீவில் 260 மில்லியன் மக்களுக்கு மேலாக வசிக்கின்றனர், இங்கு அடிக்கடி பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு வாய்ப்புள்ளது, ஏனென்றால் அதன் இருபுறமும் பசிபிக் "நெருப்பு வளையத்தை" பெற்றிருக்கிறது.
இவ்வாறு எரிமலை மற்றும் புவிசார் ஆபத்து தடுப்பு தலைவர் தெரிவித்தார்.