Published : 31 Jan 2019 03:59 PM
Last Updated : 31 Jan 2019 03:59 PM

‘நாட்டின் உளவுத்துறையினர் மீண்டும் பள்ளிக்குச் சென்று பாடம் படிப்பது நல்லது’: சம்பிரதாயமான அறிக்கையை சீரியசாக எடுத்துக் கொண்ட அதிபர் ட்ரம்ப் ஆவேசம்

ஈரானின் அச்சுறுத்தல் தெரியாமல் இருக்கின்றீர்கள், இவ்வளவு செயலற்ற தன்மையும் வெகுளித்தனத்துடனுமா இருப்பீர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் உளவுத்துறைகளை சாடியுள்ளார்.

 

அமெரிக்காவில் ஆண்டு தோறும்  ‘உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை’ தாக்கல் செய்யப்படும், இது ஒரு வழக்கமான, சகஜமான விஷயம். இது ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் ஒரு வழக்கமான வேலைதான். இதில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள ஆபத்துகள் பற்றி அறிக்கையாக எடுத்து வைக்கப்படும், இதில் எப்போதும் ஈரானும், சீனாவும் இடம்பெறுவது வழக்கமானது.

 

இந்த அறிக்கையில் வழக்கமான அச்சுறுத்தல்களும் சில புதிய அச்சுறுத்தல்களும் கூறப்படும். இதனை வெள்ளைமாளிகை எந்த ஒரு விமர்சனமும், கருத்துமின்றி ஏற்றுக் கொள்வது அங்கு ஒரு சடங்கு சம்பிரதாயமாக நடந்து வருகிறது. செனட் இண்டெட்லிஜென்ஸ் கமிட்டி, தேசிய உளவுத்துறை இயக்குநர், சி.ஐ.ஏ.இயக்குநர் ஆகியோரிடம் இந்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்ட போது தன்னுடைய அயல்நாட்டுக் கொள்கை பற்றிய மதிப்பீடு என்று தவறாகப் புரிந்து கொண்டும் தன்னை சாடுவதுமான அறிக்கை என்றும் நினைத்துக் கொண்டு கடும் ஆவேசமடைந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதனையடுத்து உளவுத்துறையினரை ‘மீண்டும் பள்ளிக்குச் சென்று பாடம் படியுங்கள்’ என்று ட்ரம்ப் ட்வீட்டில் கோபப்பட்டுள்ளார், மேலும் உளவுத்துறையினர் செயலற்று இருப்பதாகவும், ஈரானால் உருவாகும் ஆபத்து பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும், தனது ஆப்கன் கொள்கை, வடகொரியா, இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு குறித்த நிலைப்பாடுகளை மீண்டும் வலியுறுத்தியும் அவர்களைச் சாடிஉள்ளார்.

 

தன் சொந்த அரசின் ஆட்சியதிகார அமைப்பையே இதன் மூலம் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் ட்ரம்ப்.

 

மேலும், எந்த ஒரு விஷயமானாலும் தனது சாதனைகள் என்ற முப்பட்டைக் கண்ணாடி வழியாகவே அதிபர் ட்ரம்ப் பார்க்க ஆசைப்படுகிறார் என்றும் புலனாவதாக அமெரிக்க ஊடகங்கள் ட்ரம்பை சாடி வருகின்றன. அப்படி என்ன ஈரான் பற்றி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறீர்களா? ‘ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபடவில்லை’ என்றும் தனது ராஜதந்திரத்தினால் வடகொரியாவை வழிக்குக் கொண்டு வருவேன் என்று ட்ரம்ப் கூறிவரும் நிலையில் வடகொரியா தனது அணு ஆயுத தயாரிப்பு முயற்சியைக் கைவிடுவதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதெப்படி தன்னுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்காமல் ஒரு அறிக்கை இருக்க முடியும்? என்பதே அதிபர் ட்ரம்பின் பிரச்சினை போலும் என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x