Published : 07 Jan 2019 07:54 AM
Last Updated : 07 Jan 2019 07:54 AM

இஸ்லாமியர்களை சீன கலாச்சாரத்துக்கு மாற்றுவதற்கு புது சட்டம் 

சீனாவில் வாழும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. புள்ளிவிவரம் வெளியிட்டது. இதை சீன அரசு மறுத்துள்ளது.

இதற்கிடையில், சீனாவில் சில பகுதிகளில் முஸ்லிம் மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து செல்லும் ‘ஹிஜாப்’ அணிவது எல்லாமே சீனாவின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறினால் கைது செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் வாழும் முஸ்லிம்களை, சீன பழக்க வழக்கங்களுக்கும் கலாச்சாரத்துக்கும் மாற்றும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது.

சீன மயமாக்கல் என்பது, சீனாவில் வாழும் சீனர்கள் அல்லாத மற்ற சமூக மக்களை சீன கலாச்சாரத்துக்கு படிப்படியாக மாற்றுவதாகும். அதன்படி, சீனர்களின் உணவு பழக்க வழக்கம், எழுதுவது, தொழில், கல்வி, மொழி, சட்டம், வாழ்க்கை முறை, அரசியல், சித்தாந்தம், மதம், அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம் என அனைத்து விஷயங்களையும் மற்ற சமூகத்து மக்களும் பின்பற்ற செய்வது.

இதற்கான புது சட்டத்தைத்தான் சீன அரசு அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சீனாவில் வாழும் முஸ்லிம்களை படிப்படியாக சீன மயமாக்கலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஆனால், புது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து 8 இஸ்லாமிய சங்கங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது, முஸ்லிம்கள் இணக்கமான சூழ்நிலையில், சீன கலாச்சாரத்துக்கு மாறுவதற்கு பயிற்சி அளிக்கவும், வழிகாட்டவும் சீன அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இத்தகவலை சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x