

பிரேசிலில் அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50 -ஐத் தாண்டியுள்ளது. மேலும் மாயமான 100 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் வராததால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து பிரேசில் ஊடகங்கள், ''பிரேசிலின் தென் பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரில் அணை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை உடைந்து நீர் வெளியேறியதில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 50கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு நாட்கள் கடந்து விட்டதால் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அணை உடைப்பினால் கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு இதே மாதிரி, ஆஸ்திரேலியே சுரங்கத் தொழிற்சாலை அருகே அணை உடைந்து விபத்து ஏற்பட்டதில் 19 தொழிலாளர்கள் பலியாகினர். பொதுமக்கள் 25 ஆயிரம் பேர் தண்ணீர் இல்லாமல் பெரும் துன்பத்துக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.