

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி தீவிரவாதிகளின் படைத்தளபதி கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''ஏமனின் தலைநகரம் சனாவில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் ஏமனில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இம்ராகிம் அல் ஷமி கொல்லப்பட்டார். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் படையில் ஏவுகணைத் தாக்குதலுக்கான தளபதி பொறுப்பில் இருந்தவர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமன் உள்நாட்டுப் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.