Published : 04 Jan 2019 11:11 AM
Last Updated : 04 Jan 2019 11:11 AM

ஆப்கன் நூலகம் குறித்த ட்ரம்ப்பின் கேலிப் பேச்சு: மோடிக்கு காங்கிரஸ் ஆதரவு

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகத்தால் யாருக்கு பயன் என பிரதமர் மோடியை கிண்டல் செய்த ட்ரம்புக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தனது வெள்ளை  மாளிகையில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது ஆப்கானிஸ்தான் குறித்த கேள்விக்கு  ட்ரம்ப் பதிலளிக்கும்போது“இந்தியப் பிரதமர் மோடி எனிடம்  அடிக்கடி , ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது?. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்பார்களா?

பிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில்  பிரதமர் மோடி அமைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது’’ என கிண்டல் தொனியில் கூறியிருந்தார்.

ட்ரம்பின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதற்கு இந்திய அரசு தரப்பில் பதிலடி அளிக்கப்பட்டது.  அதில், ‘போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். தீவிரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும் உலக நாடுகளின் பணிகள் முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான பணிகளை இந்தியா செய்து வருகிறது. பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை இந்தியா செய்துள்ளது’’ என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இந்த விவகாரத்தில் ஆதரவு அளித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் அக்மத் பட்டேல் கூறும்போது, ''இந்தியா குறித்தும் இந்திய பிரதமர் மோடி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்தியா 2004 முதல் ஆப்கானில் தன் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவி வருகிறது'' என்றார்.

மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ''ட்ரம்ப், நீங்கள் இந்தியப் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்வதை நிறுத்த வேண்டும். பொருளாதார அடிப்படையிலான உறவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.  நாங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள சகோதர, சகோதரிகளுடன் நாங்களும் ஒருவர்''என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x