ஜமால் கொலை குறித்த சவுதியின் விசாரணை: ஐ.நா.விமர்சனம்

ஜமால் கொலை குறித்த சவுதியின் விசாரணை: ஐ.நா.விமர்சனம்
Updated on
1 min read

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சவுதியில் நடக்கும் விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல் இல்லை என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவினா கூறும்போது, ”ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய  5 சவுதி அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருக்கிறார். சவுதியில் இந்த விசாரணை முறையானதாக நடைபெறுகிறதா? என்ற தகவலை இதுவரை பெற முடியவில்லை.

சவுதியில் நடக்கும் இந்த சுதந்திரமான விசாரணை சர்வதேச அளவிலான தலையீடுகளுடன் நடக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் மரண தண்டனையை விரும்பாது” என்று தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இந்த நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகம்து பில் சல்மான்  சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.

முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. ஆனால் இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறிய சவுதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in