

ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
2009-ல் விதிக்கப்பட்ட 25 ஆண்டு சிறை தண்டனையில் மீதிக்காலத்தை புஜிமோரி இனி சிறையில் கழிக்க வேண்டும். இதற்காக 80 வயதான புஜிமோரியை, நீதிமன்றம் நியமித்த மருத்துவக் குழு பரிசோதித்து அறிக்கை அளித்தது.
பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரி. இவர் 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் அரசை எதிர்த்துப் போராடிய 25 பேரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வயது முதுமை காரணமாக சிறையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறையில் அவரின் உயிர் பிரிய வேண்டாம் என்று கூறி, பெருவின் அதிபர் பெட்ரோ பாப்லோ முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
அதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் லிமா உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அரசியல் காரணங்களுக்காகவே பாப்லோ, புஜிமோரியை விடுதலை செய்ததாகக் கூறப்பட்டது.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம், நீதிமன்றம் இதில் தலையிட்டு பொது மன்னிப்பை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து உடல்நிலை மோசமானதாகக் கூறி, புஜிமோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, நீதிமன்றம் நியமித்த மருத்துவக் குழு புஜிமோரியைப் பரிசோதித்து அறிக்கை அளித்துள்ளது. அதில், ''புஜிமோரி பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மீண்டும் நேற்று (ஜன. 23) சிறையில் அடைக்கப்பட்டார்.