இந்தியாவின் ஒரு சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 39 % அதிகரிப்பு

இந்தியாவின் ஒரு சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 39 % அதிகரிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2018-ம் ஆண்டில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து நாட்டின் 10 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் குறித்த அறிக்கை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு நாட்டில் பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி, சமூகத்தில் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல என்றும் எச்சரித்துள்ளது.

ஏழை, பணக்காரர்கள் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவது நல்லதல்ல, உலக அளவில் அரசியல் தலைவர்களும், பல்வேறு நாட்டுத் தலைவர்களும், தொழிலதிபர்களும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகப் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், சர்வதேச நலஅமைப்பான ஆக்ஸ்ஃபாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்துகள் மட்டும் கடந்த ஆண்டு ரூ.2,200 கோடி அதிகரித்துள்ளது. உலக அளவில் உள்ள 12 சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 250 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உலக அளவில் உள்ள ஏழை மக்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 11 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 10 சதவீத மக்கள் அதாவது, 13.60 கோடி மக்கள் தொடர்ந்து வறுமையிலும், ஏழ்மை நிலையிலும் இருந்து வருகின்றனர்.

சமூகத்தில் அதிகரித்து வரும் ஏழை, பணக்காரர்கள் இடைவெளி, ஒரு கட்டத்தில் உலக அளவில் மக்களின் பெரும் கோபத்தை வரவழைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

உலக அளவில் பணக்காரர்கள், ஏழைகள் இடையிலான சமூக இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு ஆக்ஸ்ஃபோம் கவலை தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் சொத்து மதிப்பு 11200 கோடி டாலராகும். இவரின் ஒருசதவீத சொத்துகளை வைத்து, எத்தியோப்பியா நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவையும் செய்துவிட முடியும்'' எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in