

தாய்லாந்தில் அடையாளம் தெரியாத நபர்களால் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து தாய்லாந்து போலீஸாரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘தாய்லாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள நாராதிவாட் மாகாணத்தில் உள்ள ரத்தனுபாப் புத்த மதம் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 புத்த துறவிகள் கொல்லப்பட்டனர்.
இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது ” என தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தை பொறுத்தவரை அங்கு புத்த மதம் பரவலாக காணப்பட்டாலும், தென் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.