

சீனாவின் பிரபல ஹுவேய் நிறுவனம் மீது தொழில் நுட்பத் திருட்டு போன்ற பல குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை தரப்பில், ''சீனாவின் ஹுவேய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத் தகவல்களைத் திருடியுள்ளது. தொடர்ந்து அத்துமீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் ஈரானுக்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தகர்க்க இந்த நிறுவனம் சதி செய்கிறது. இதன் காரணமாக ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மங் வான்ஜோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஹுவேய் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜிங் ஷுஹாங் செவ்வாய்க்கிழமை கூறும்போது, ''சீனாவின் வர்த்தகத்தைக் கொல்ல அமெரிக்கா திட்டமிடுகிறது'' என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபரானது முதலே அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் தொடங்கிவிட்டது. தொடர்ந்து சீனப் பொருட்கள் மீது வரி விதிப்புகளை விதித்த ட்ரம்ப் , சீனத் தயாரிப்புகள் மீது கூடுதலாக 26,700 கோடி டாலர் வரி விதிக்க முடிவு செய்து அறிவித்தார். இதன் காரணமாக சீனத் தயாரிப்புகளின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.