Published : 07 Jan 2019 01:01 PM
Last Updated : 07 Jan 2019 01:01 PM

என் குடும்பத்தினரே என்னைக் கொன்றுவிடுவர்- புகலிடம் கேட்டு தாய்லாந்தில் கதறிய சவுதி இளம்பெண்

சவுதியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த இளம்பெண், பேங்காக் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதை அடுத்து புகலிடம் கோரியுள்ளார்.

சவுதி அரேபியாவில் பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஆளும் அரசின் உரிமைகள் குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரஹாஃப் மொகமது அல் குனான் என்னும் 18 வயது இளம்பெண், குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினரே தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்துள்ளார்..

இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ''குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர். இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து  காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு இறைஞ்சிக் கேட்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன் ரஹாஃப், அதிகாரிகள் தன்னை அனுப்பாமல் இருக்க ஹோட்டல் அறையின் சாமான்களைக் கொண்டு தடுப்பரண் அமைத்து அதனுள் இருப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டார்.

இதுகுறித்து ஏஎஃப்பியிடம் பேசிய ரஹாஃப், ''என்னை மீண்டும் சவுதிக்கு அனுப்பினால் என் குடும்பத்தினரே என்னைக் கொன்று விடுவர். இது 100 சதவீதம் உண்மை'' என்றார்.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.

இதனிடையே பேங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரி கூறும்போது, ரஹாஃபின் தந்தை தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, ரஹாஃபைத் திருப்பி அனுப்பும்படி கூறியதை உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை வெளியிட்ட அறிக்கையில், ''புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x