

ஈரானில் தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் தரப்பில், ''ஈரானின் கசரும் நகரில் அடையாளம் மறைக்கப்பட்ட 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற காரணத்துக்காக ஈரானின் சட்டவிதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 10 ஆம் தேதி அவர் பொதுவெளியில் தூக்கில் போடப்பட்டார். அவர் மீது கடத்தல் சம்பவக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானைப் பொறுத்தவரை அங்கு தன்பாலின உறவு என்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து ஈரானில் சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் அலிரேசா நதார் கூறும்போது, ''ஈரானில் 40 வருடங்களாக LGBT சமூகம் தீவிரவாதப் பிடியில் சிக்கியுள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் வாஷிங்டனுக்கு இன்னொரு முறை வந்தால் ஈரானில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுவது ஏன் என்று மக்கள் கேட்க வேண்டும்'' என்றார்.