Last Updated : 15 Dec, 2018 09:17 AM

 

Published : 15 Dec 2018 09:17 AM
Last Updated : 15 Dec 2018 09:17 AM

ஒரு ஆண்டுக்குப்பின் திருப்பம்: இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமே அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கிறோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று முறைப்படி அறிவித்தார்.

இஸ்ரேலும் பலஸ்தீனமும் ஜெரூசலேமே தங்களின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றன. ஆனால, 1947ல் யூத அரபு நாடுகளுக்கிடையில் பிரிவை அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்திய ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலேம் நகரத்தின் மதங்களின் புனித நகரம் என்ற சிறப்பை மதித்து அனைத்துலக இறைமையும் கட்டுப்பாடும் கொண்ட தனித் தகுதியை வழங்கியிருந்தது.

எனினும் 1948ல் நடத்திய போரில் மேற்கு ஜெருசலேம் நகரைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த இஸ்ரேல் அதனைத் தனது பகுதியாக பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால், இதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கவில்லை.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வருவதற்கு முன்பு வரை அமெரிக்காவும் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிவிப்பில், இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறோம் என்று அறிவித்து உலக அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பிரான்ஸ், ஜெர்மனி, அரபு நாடுகள், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில் சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்தபின், இன்று இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரைத் தலைநகராக அங்கீகரித்துள்ளது ஆஸ்திரேலியா.

இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிஸன் கான்பெரேவாலி் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டின் தலைகராக மேற்கு ஜெருசேலத்தை நாங்கள் அங்கீகரிப்போம். அில் மாற்றமில்லை . இப்போதுள்ளநிலையில், ஆஸ்திரேலியத் தூதரகம் தலைநகர் டெல் அவைவ் நகரிலேயே இருக்கும், பின்னர்மாற்றியமைக்கப்படும்.

எங்களின் வெளிநாட்டுக் கொள்கை எங்களின் குணத்தையும், நாட்டின் மதிப்புகளையும் பேசுவதாக இருக்க வேண்டும். என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். நாங்கள் எதன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அதை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு நெருங்கிய நட்பு நாடும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள இந்தோனேசியா மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரிக்கக்கூடாது என்று அது நட்புறவைப் பாதிக்கும் என்று கூறி வந்தது. இந்நிலையில், இந்தோனேசியாவின் எதிர்ப்பையும் மீறி தற்போது ஆஸ்திரேலியா ஜெருசலேமை அங்கீகரித்தது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் விரிசலை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x