ஆப்கனில் அரசு அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு, மனிதவெடிகுண்டு தாக்குதலில் 43 பேர் பலி

ஆப்கனில் அரசு அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு, மனிதவெடிகுண்டு தாக்குதலில் 43 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் நேற்று தீவிரவாதிகள் சிலர் புகுந்து நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் கொல்லப்பட்டனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏறக்குறைய நேற்று மாலை 4 மணியில் இருந்து 7 மணிநேரம் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஜிப் தானிஷ் கூறியதாவது:

காபூல் நகரின் ஷாஸ்தார்க் பகுதியில் மக்ருயான் சாலையில் ஏராளமான அரசு அலுவலகங்கள், பல்வேறு நாடுகளின் துணைத் தூதரக அலுவலகங்கள் இருக்கின்றன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தச் சாலையில் நேற்று மாலை 4மணி அளவில் காரில் வந்த 5 பேர் தீடிரென அரசு அலுவலகம் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள்.

அதில் ஒருவர் தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். ஏராளமான மக்கள் அரசு அலுவலகத்தில் முடங்கினார்கள். தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ஏறக்குறைய 7 மணிநேரம் வரை நடந்த துப்பாக்கிச் சூட்டில், 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்கொலைப்படைத் தாக்குதலில் 42 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 போலீஸார் உள்ளிட்ட 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கி சூட்டுக்கு இடையே அலுவலகத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை ஐஎஸ் தீவிரவாதிகளோ அல்லது தலிபான் தீவிரவாதிகளோ பொறுப்பு ஏற்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் அரசியல் நிலைத்தன்மை அடையத்தொடங்கியவுடன், அமெரிக்கா தனது படைகளைக் குறைத்துக்கொள்ள கடந்தவாரம் முடிவு எடுத்தது, சிரியாவில் ஒட்டுமொத்தமாக அமெரிக்கப்படைகள் விலகுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தான் மீண்டும் இதுபோன்ற கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in