உள்நாட்டுப் பிரச்சினையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது: இந்தியா வலியுறுத்தல்

உள்நாட்டுப் பிரச்சினையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது: இந்தியா வலியுறுத்தல்
Updated on
1 min read

உள்நாட்டுச் சண்டை நிலவும் நாட்டில் உள்ள குடிமக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பிற நாடுகள் முயற்சிக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதிக் குழுவின் முதன்மை செயலாளர் அபிஷேக் சிங் பேசியதாவது:

“உலக நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதால், நிலைமை மேலும் சிக்கலாகி விடுகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான தீர்வு காண சர்வதேச நாடுகள் முயற்சிக்க வேண்டும்.

வலுக்கட்டாயமாக தலையிடும் போக்கை கைவிட வேண்டும். இன அழிப்பு, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உள்ளிட்டவற்றிற்கு ஆளாகும் மக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நாடு தவறிவிட்டால், அப்போது சர்வதேச நாடுகள் தலையிட்டு அந்நாட்டுக்கு உதவலாம். எனினும், பாதிக்கப்பட்ட நாடு வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும். அதுவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இச்செயலை மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டுச் சண்டை நிலவும் நாட்டில் உள்ள குடிமக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பிற நாடுகள் முயற்சிக்கக் கூடாது. 15 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தும் கடமையை முழுவதுமாக நிறைவேற்றவில்லை. இந்த கவுன்சிலை மாற்றியமைக்க வேண்டும்” என்றார் அபிஷேக் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in