Published : 10 Sep 2014 10:58 AM
Last Updated : 10 Sep 2014 10:58 AM

மலேசிய விமான விபத்துக்கு தாக்குதலே காரணம்: நெதர்லாந்து ஆய்வறிக்கை தகவல்

கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததற்கு அதிக சக்தியும் வேகமும் கொண்ட பொருள்கள் விமானத்தை தாக்கியதே காரணம் என்று நெதர்லாந்து பாதுகாப்பு வாரியம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியான இடைக்கால ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேசிய பயணிகள் விமானம் எம்எச் 17, கிழக்கு உக்ரைனில் கடந்த ஜூலை 17-ம் தேதி நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் நெதர்லாந்து பாதுகாப்பு வாரிய இடைக்கால அறிக்கையில், “விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது விமானிகளின் செயல்பாடுகளோ காரணம் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

விமானத்தின் கறுப்பு பெட்டிகள், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், உக்ரைன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அளித்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து பாதுகாப்பு வாரியத்தின் முழு அறிக்கை 2015-ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.ரஷ்யா வழங்கிய ஏவுகணை மூலம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இதனை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா, உக்ரைன் அரசுப் படைகளே விமானத்தை தாக்கியதாக கூறியது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய தடைகளை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன் விவகாரத்தில், அந்நாட்டு அரசுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் போர் நிறுத்த உடன்பாடு பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து மீறி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் இறந்ததாகவும், 29 பேர் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.

ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

இதனிடையே, உக்ரைன் அரசு – கிளர்ச்சியாளர்கள் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு பாதுகாக்கப்படுமானால், ரஷ்யா மீதான புதிய தடைகளை மறு ஆய்வு செய்யத் தயார் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் ஹெர்மன் வேன் ராம்புய் கூறும்போது, “புதிய தடைகளை பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவே நீக்குவது பற்றி பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் கள நிலவரங்களைப் பொறுத்து இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

இந்நிலையில், “தென்கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் அமைதித் தீர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினும் உக்ரைன் அதிபர் பொரொஷென் கோவும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வருகிறார்கள்” என்று ரஷ்யா கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x