

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுநாள்வரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று அந்நாட்டு அரசு கூறி வந்த நிலையில், இப்போது பிரதமரே ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக மும்பை நகருக்குள் கடந்த 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்தனர். ரயில் நிலையம், நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு 150க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்தனர்.
இதில் 9 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டார். பின்னர் அவர் வழக்கு விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு பயங்கரவாதிகள்தான் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதை பாகிஸ்தான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட்' நாளேட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது அவர் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தீவிரவாதத்தின் செயல்பாடு. மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று எனது அரசு விரும்புகிறது.
மும்பை தாக்குதல் பிரச்சினையில் தீர்வு காண்பது என்பது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை. இதில் பாகிஸ்தான் நலனும் அடங்கியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குத் தொடர்பான தற்போதைய நிலவரத்தைக் கேட்டுள்ளேன்
முஸ்லிம்களுக்கு எதிரான அரசு
இந்தியாவுடன் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால், தற்போதுள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசு, எங்களை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள அரசு முஸ்லிம்களுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் இருக்கிறது. இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிந்தவுடன், இந்தியாவுடன் நல்லவிதமாகப் பேச்சு தொடரும் என நம்புகிறேன்.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.
மும்பை தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, குற்றவாளிகளை நீதிமுன் நிறுத்துவதில் பாகிஸ்தான் சிறிதுகூட பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான் கருத்து குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் “ மும்பைத் தாக்குதலை யார் நடத்தினார் என்று
நமக்குத் தெரியும். எந்த நபரிடம் இருந்து எந்த அறிக்கையும் இனிமேல் பெற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சர்வதேச சமூகத்துக்கும் இந்தத் தாக்குதலை நடத்தியது யார் எனத் தெரியும். தவறுகளை ஏற்றுக்கொள்வது சிறந்தது” எனத் தெரிவித்தார்.