அமெரிக்காவுக்கு வடகொரியா திடீர் மிரட்டல்

அமெரிக்காவுக்கு வடகொரியா திடீர் மிரட்டல்
Updated on
1 min read

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணுஆயுத அழிப்பு நிறுத்தபடும் சூழல் ஏற்படும் என வடகொரியா மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வடகொரியா தரப்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,‘‘வடகொரியாவுடனான உறவில் நட்புறவை பேணுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகள் பாராட்டிக் கூடியவை. ஆனால்  வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

இதன் மூலம் அணுஆயுதம் உற்பத்தி செய்வதை வடகொரியா கைவிடும் என்று அமெரிக்கா நினைத்தால்  இது அமெரிக்காவின் தவறான கணிப்பாகும். மேலும் இது எங்களுடைய ஆணுஆயுதங்களை அழிப்பிற்கான பாதைக்கு நிரந்தர  தடையை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பாக வடகொரியாவின் மூன்று அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட வடகொரிய அதிகாரிகளில்  அந்நாட்டு அதிபர் கிம்முக்கு நெருக்கமானவரான சோ ராயிங் ஹேவும் ஒருவர்.

முன்னதாக  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in