

பருவநிலை மாற்றமே நாம் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இயற்கை ஆர்வலர் டேவிட் ஹட்டன்ப்ரோ தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டில் உள்ள காட்வோஸ் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் சபை சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இயற்கை ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான டேவிட் ஹட்டன்ப்ரோ தொடங்க விழாவில் பேசும்போது, ”நமது நாகரிக வளர்ச்சி காரணமாக இயற்கையாக ஏற்பட்ட அழிவுக்கு நாம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அதன் அழிவின் ஆழம் அதிகரிக்க நேரிடும்.
தற்போதைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான பேரிடர்களைதான் உலகம் முழுவதும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். பருவநிலை மாற்றமே நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக மக்கள் இதுகுறித்துப் பேச வேண்டும். நமக்கு தகவல் கிடைத்துவிட்டது. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. முடிவெடுப்பவர்கள் விரைந்து செயல்பட வேண்டும்'' என்றார்.
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்துக்குப் பிறகு பருவநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடக்கும் மாநாடாக இது பார்க்கப்படுகிறது.