இந்தோனேசியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு; கடவுளை வேண்டி ஓடினேன் : சுற்றுலா பயணி கண்ணீர்

இந்தோனேசியாவில் சுனாமி: பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு; கடவுளை வேண்டி ஓடினேன் : சுற்றுலா பயணி கண்ணீர்
Updated on
2 min read

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை நேற்று இரவு 9 மணிக்கு(உள்ளூர்நேரப்படி) வெடித்துச் சிதறி, எரிமலைக்குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டே இருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.

அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள சைல்டு எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சுமத்ரா, ஜாவா கடற்கரைப்பகுதியில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதிலும் நேற்று பவுர்ணமி என்பதால், கடல் ஆவேசமாகக் காணப்பட்டது. அனைத்து ஒன்று சேர்ந்த நிகழ்வால் சுனாமி அலைகள் உருவாகின

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரஹோ கூறுகையில், “ தெற்கு சுமத்ரா, ஜாவா மேற்குப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்திப்பகுதியை சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் தாக்கின. அலைகள் ஏறக்குறைய 20 மீட்டர் உயரத்துக்கு எழும்பியது.

முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கின என்று சந்தேகித்தோம். ஆனால், கிராகட் எரிமலையில் உள்ள சைல்டு எனும் எரிமலை வெடித்தது, கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ஏற்பட்டுள்ளது எனத் தகவல் அறிந்தோம்.

இந்த சுனாமி அலை தாக்கியதால், கரிட்டா கடற்கரைப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதியில் வசித்த மக்களில் 62 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. ஏராளமானோரைக் காணவில்லை, 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் அரசு அலுவலகங்களில்பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சுனாமி அலை தாக்கியதில், மரங்கள் வேரோடு தூக்கி எறியப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள், மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கடற்கரைப்பகுதியில் மீட்புப்பணிகளும், தேடுதல் பணிகளும் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

முகமது பின்டாங் என்ற சுற்றுலாப்பயணி கூறுகையில், “ நாங்கள் குடும்பத்துடன் விடுமுறையைக்கழிக்க 9 மணிக்குத்தான் கரிட்டா பீச்சுக்கு வந்தோம். ஆனால், திடீரென மிக உயரத்துக்கு அலைகள் எழும்பி வந்ததால்,நாங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினோம். திடீரென மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அதன்பின் மறைவிடத்துக்குச்சென்று உயிர்தப்பினோம்” எனத் தெரிவித்தார்.

லாம்பங் நகரைச் சேர்ந்த  சுற்றலாப்பயணி லுப்தி அல் ரஸ்யித் கூறுகையில் “ நான் கலியன்டா நகர பாச்சில் இருந்தேன். மிகப்பெரிய அலை வருவதைப் பார்த்து என்னுடைய மொபட்டை ஸ்டார்ட் செய்தேன், அது வேலைசெய்யவில்லை. உடனடியாக கடவுளை வேண்டிக்கொண்டு சாலையில் என்னால் முடிந்த அளவு ஓடத் தொடங்கி உயிர்பிழைத்தேன்” எனத் தெரிவித்தார்.

சுனாமி அலைகள் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிக உயரமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in