Last Updated : 20 Dec, 2018 09:19 AM

 

Published : 20 Dec 2018 09:19 AM
Last Updated : 20 Dec 2018 09:19 AM

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் வெற்றி; அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு; சிரியாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிவிட்டன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடைபெற்று வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுச் சண்டையில், குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் 2,000 வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் “ எனத் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியான சிறிதுநேரத்தில், வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. அமெரிக்க ராணுவம் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.

அதேசமயம், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுத்தான் அமெரிக்க ராணுவம் நாடுதிரும்புகிறது. ஆனால், ஐஎஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உலகளாவிய போர், பிரச்சாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும் என்று பென்டகன் செய்தித்தொடர்பாளர் டானா வொய்ட் தெரிவித்தார்

இந்த உத்தரவைத் தொடர்ந்து சிரியாவில் இருந்து அடுத்த 24 மணிநேரத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினரும் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் வெற்றி பெற்றதாக அதிபர் ட்ரம்ப் கூறியதற்கு பல்வேறு நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் டோபியாஸ் எல்வுட் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ அதிபர் ட்ரம்பின் வார்த்தையைக் கடுமையாக மறுக்கிறேன். தீவிரவாதம் வேறுவழியில் உருமாறி வரும். ஐ.எஸ்.தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அடங்கிவிடவில்லை” எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மூத்த செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், “ சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேறும் முடிவு பல மோசமான விளைவுகளை உண்டாக்கும்” என எச்சரித்துள்ளார்.

சிரியாவில் குர்து போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்க படையினர் சண்டையிட்டு வந்த நிலையில், அமெரிக்க படையினர் வாபஸ் பெறத் தொடங்கியிருப்பது குர்து போராளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், குர்து இனப் போராளிகளை துருக்கி அரசு தீவிரவாதிகளாக சித்தரித்து வருகிறது. விரைவில் குர்து இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்து வந்தது. ஆனால் அமெரிக்க படைகள் இருக்கும் துணிச்சலில் குர்து இனத்தவர்கள் தைரியமாக இருந்தனர். இப்போது, அவர்கள் செல்வது குர்து போராளிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x