Published : 09 Dec 2018 08:34 AM
Last Updated : 09 Dec 2018 08:34 AM

கொரிய தீபகற்பத்தில் நம்பிக்கை ஒளி

உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கூடிப் பேசும்போது பல நல்ல விஷயங்கள் நடக்கும். சமீபத்தில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி20 கூட்டத்திலும் இரு தரப்பு சந்திப்புகளோடு, கூட்டத்தில் பங்கேற்காத தலைவர்களுக்கும் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.

உதாரணமாக, வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் விருப்பம் போலவே எல்லாம் நடக்கும் என்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜேவிடம் கூறியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். தான் சொன்னதாக, இதை கிம்மிடம் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நியூஸிலாந்தில் தன்னை சந்தித்த நிருபர்களிடம் கூறியிருக்கிறார். ‘‘அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கூட்டாக செயல்படவும், கிம்மின் விருப்பத்தை நிறைவேற்றவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்’’ எனக் கூறியிருக்கிறார் மூன்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் இருவரும் அடுத்தாண்டு ஆரம்பத்தில் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேச தற்போது வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் இது நடக்கலாம். எப்படியும் ஜூலைக்குள் சந்திப்பு நடக்கும். கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த முதல் சந்திப்புக்குப் பிறகு, கடந்த 6 மாதங்களாக அமெரிக்கா, வட கொரியா இடையே காரசாரமான கருத்து மோதல்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் நல்லது நடப்பதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அங்கு இயல்புநிலை திரும்புவதற்கு அமெரிக்காவும் வட கொரியாவும் மட்டும் நினைத்தால் போதாது. அதைத்தாண்டி, ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்கும் இருக்கிறது.

சிங்கப்பூரில் ட்ரம்பும் கிம்மும் சந்தித்துப் பேசிய பிறகு, கொரிய தீபகற்பத்தில் நிலைமை பெரிதும் முன்னேறியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வட கொரியாவின் ஆணவப் பேச்சும் அது ஏவும் ஏவுகணைகள் ஜப்பான் அருகே கடலில் விழுவதும் குறைந் திருக்கிறது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. விரைவில் வட கொரிய அதிபர் கிம், முதன்முறையாக தென் கொரியாவுக்கு பயணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதெல் லாம், வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளா தார தடைகளை விலக்குவது குறித்த தீர்வு ஏற்பட்டால்தான் சாத்தியமாகும். `அமெரிக்கா வும் மற்ற நாடுகளும் எங்களின் அணுஆயுத சோதனை குறித்துத்தான் பேசுகிறார்களே தவிர, எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை, தண்டனைகளை விலக்குவது குறித்து பேச மறுக்கிறார்கள்..’ என வட கொரிய அதிபர் கிம், வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

பொருளாதாரத் தடைகள் நீங்குவதற்காக கிம் காத்துக் கொண்டிருக்கிறார். அது நீங்கிவிட் டால், அணு ஆயுதங்களை அழிப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் இறங்கமாட்டார் என்றும் எங்கெல்லாம் அணு ஆயுத சோதனை மையங்கள் இருக்கிறது என்பதைக் கூட சொல்ல மாட்டார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் நினைக்கிறார்கள். இதற்கிடையில் யுரேனியத்தை செறிவூட்டும் காங்சாங் என்ற ரகசிய திட்டத்தை வட கொரியா செயல்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். எப்படியும் வட கொரியாவிடம் 20 முதல் 60 அணு ஆயுதங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அணு ஆயுதங்களை அழிப்பது எளிதான காரியமாக இருக்காது. கடந்த ஆண்டு முதல் சீனாவும் பாதகமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வட கொரியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் பிரச்சினைக்கு தீர்வு காண, ட்ரம்புடனான சந்திப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் கிம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.

வட கொரியாவும் தென் கொரியாவும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கும் அளவுக்கு அங்கு பதற்றம் குறைந்திருப்பதால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன. இதைத்தான் இரு நாடுகளின் மக்களும் நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், பிரிந்து கிடந்த வடக்கு, தெற்கு வியட்நாம் நாடுகளும், கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகளும் இணைந்ததைப் போல் எளிதான விஷயமாக இது இருக்காது. அந்த அளவுக்கு சமூக, கலாச்சார வேறுபாடுகள் உள்ளன. மேலும் இரு நாடுகளும் இணைவதற்கு தென் கொரியா பல லட்சம் கோடி டாலர்களைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி,

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x