Published : 08 Dec 2018 03:45 PM
Last Updated : 08 Dec 2018 03:45 PM

மீண்டும் வரலாறு காணாத ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்? - பிரான்ஸில் உஷார் நிலை

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் திரண்டு நடத்திய ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் பெட்ரால் மற்றும் டீசல் விலை அந்நாட்டில் கடுமையாக உயர்ந்தது. பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் போராட்டம் தொடங்கியது. எரிபொருள் விலை உயர்வால் அன்றாட செலவுகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மஞ்சள் ஜாக்கெட் அணிந்து போராட்டத்தை இளைஞர்கள் சிலர் முன்னெடுத்தனர்.

பிரான்ஸில் வாகன ஓட்டுநரின் யூனிபார்மை குறிக்கும் விதமாக இந்த ஆடையை அணிந்து மக்கள் போராட்டம் நடத்தினர். கார் ஓட்டுநர்கள் ஒருங்கிணைத்த இந்த போராட்டம் பின்னர் மக்கள் போராட்டமாக மாறியது. பேஸ்புக், ட்விட்டர் வழியாக பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு எதிராக தொடர் பிரசாரங்கள் நடந்தன. ஆங்காங்கே இளைஞர்கள் கூடி பிரான்ஸ் அதிபரை கண்டித்து போரட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த சனிக்கிழமை  அன்று பிரான்ஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணககான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டத்தால் பிரான்ஸ் ஸ்தம்பித்து போனது.  போராட்டம் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞர்கள் பாரீஸ் தெருக்களில் இறங்கி வாகனங்களையும் சேதப்படுத்தினர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால் அவசரநிலையை பிரகடனம் செய்வது குறித்து பிரான்ஸ் அரசு பரிசீலித்தது.

எனினும் குறிப்பிட்ட சில வரிகளை நீக்கி எரிபொருள் விலையை பிரான்ஸ் அரசு சற்று குறைத்தது. இதனால் போராட்டம் சற்று தணிந்துள்ளது. இதனிடையே வார இறுதிநாளான சனிக்கிழமை இன்று என்பதால் மீண்டும் சிலர் போராட்டத்தை தூண்டுவதாக பிரான்ஸ் அரசுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பாரிஸ் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி பாரி்ஸ் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x