Published : 11 Sep 2014 11:43 AM
Last Updated : 11 Sep 2014 11:43 AM

உலக மசாலா!

விலங்குகளிடம்தான் கருவிகளைப் பயன்படுத்தும் சோதனை இதுவரை நடத்தப்பட்டு வந்தது. முதல் முறையாக கக்கட்டூ கிளி இந்தச் சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறது. சிறிய மர அட்டையை வைத்துவிட்டு, ஒரு கூண்டுக்குள் பருப்புகளை வைத்தனர். கிளி அட்டையை அலகால் கிழித்து, குச்சியாக மாற்றியது, பிறகு கம்பிக்குள் குச்சியை விட்டு, பருப்புகளை வெளியே எடுத்துச் சாப்பிட்டது! இதன் மூலம் பறவைகளில் சிலவும் கருவிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு அறிவைப் பெற்றிருக்கின்றன என்ற உண்மை தெரியவந்திருக்கிறது.

சிம்பன்ஸி, டால்பின் வரிசையில் கக்கட்டூவுக்கும் இடம் கிடைச்சிருச்சு!

கிண்டலுக்குத் தப்பாதவர்கள் யாருமே இல்லை. ஃபேஷன் உலகில் சூப்பர் மாடலாக இருக்கும் நவோமி கேம்பல், பள்ளியில் படிக்கும்போது தன் உயரத்துக்காக அதிகமான கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார். 5 அடி 9 1/2 அங்குலம் உயரமே இன்று இவரை உலகின் மிக முக்கிய மாடலாக உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது!

கிண்டல் செஞ்சவங்க இப்ப அண்ணாந்து பார்ப்பாங்களோ?

தன் கையே தனக்கு உதவி என்பார்கள். தாய்லாந்து கிராமத்தில் வசிக்கும் டுவாங்ஜே சமக்சமர்ன் என்ற பெண்ணுக்கு அவருடைய கைகளே சுமக்க முடியாத அளவுக்கு பாரமாக இருக்கின்றன. 59 வயதாகும் சமக்சமர்ன் 50 வருடங்களாக ராட்சச கைகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஏன், வெளியில் கூட வர முடிந்ததில்லை. எந்த வேலையும் செய்ய முடியாது. 25 வயதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. மீண்டும் கைககள் முன்பிருந்ததை விடப் பெருத்து விட்டன. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெட்டிக்கடை வைத்து பிழைத்து வருகிறார். இந்த நோய்க்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

டுவாங்ஜே சமக்சமர்ன்

ச்சே! எவ்வளவு விசித்திரமானது இந்த மனித வாழ்க்கை…

அமெரிக்காவைச் சேர்ந்த விவியன் பயாக் ஆலிஸ் டூப்ஸ் தம்பதிக்கு 72 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் திருமணம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டது. 91, 90 வயதாகும் இந்தத் தம்பதி தன்பாலின உறவாளர்கள் என்பதால், இவர்களது திருமணம் இத்தனை ஆண்டுக்காலமும் அங்கீகரிக்கப்படவில்லை. கல்லூரியில் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

மற்ற தம்பதிகளைப் போலவே இயல்பான வாழ்க்கை நடத்தினர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். தங்களைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்திலும் கலந்துகொண்டனர். தங்கள் வாழ்க்கை முடிவதற்குள் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ந்து போயிருக்கிறார்கள்!

பல்லாண்டு வாழ்க! வாழ்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x