ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் அவசியம்: ஜி4 நாடுகள் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் அவசியம்: ஜி4 நாடுகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி4 வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஜி4 கூட்ட மைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார்.

சுஷ்மா ஆலோசனை

பிரேசில் வெளியுறவு அமைச்சர் லூயிஸ் ஆல்பர்டோ பிகர்டியோ மசாடோ, ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மியர் பெடரல், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷ்கிதா ஆகியோருடன் சுஷ்மா ஸ்வராஜ் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள 2005-ம் ஆண்டு மாநாட்டில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதை நான்கு நாடுகளின் அமைச்சர்களும் சுட்டிக் காட்டினர்.

இந்த கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2015-ம் ஆண்டு ஐ.நா. சபையின் 70-ம் ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் முழுமையாக அமல் படுத்த வேண்டும்.

கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாக, ஜி4 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பரஸ்பரம் ஆதரவு அளிக்கும். வளரும் நாடுகளுக்கு கவுன்சிலில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in