Published : 31 Dec 2018 05:23 PM
Last Updated : 31 Dec 2018 05:23 PM

புற்றுநோய் சிகிச்சையில் மலர்ந்த காதல் திருமணம்; குழந்தை பெற நிதி திரட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள்

ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு, பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினர் செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மரிஷா சாப்ளின் (26), ஜான் ஹிப்ஸ் (29). இருவரும் சிகிச்சைக்காகச் சந்தித்த இடத்தில் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர்.

புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால், இயல்பாகக் குழந்தை பெற மரிஷாவின் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் செயற்கைக் கருவூட்டல் ( ஐவிஎஃப்) முறையில் குழந்தை பெற முடிவு செய்தனர். அதன்படியே முதல் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தனர்.

இரண்டாவது முறை குழந்தை பெற ஆசைப்பட்டவர்களுக்கு நிதி தடங்கலாய் இருந்தது. குறிப்பிட்ட ஃபேஸ்புக் குழுவைச் சேர்ந்த சில நண்பர்கள், இதுகுறித்துக் கேள்விப்பட்டனர்.

மரிஷாவுக்காக ரகசியமாக நிதி திரட்டினர். சுமார் 2,000 பவுண்டுகள் (சுமார் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம்) சேர்ந்தன. அதை இதுவரை சந்தித்திராத மரிஷாவுக்கு அனுப்பினர். ஐவிஎஃப் மூலம் கருவுற்றார் மரிஷா. அதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று சிசேரியன் மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மரிஷா.

அற்புதமான உணர்வு

இதுகுறித்துப் பேசிய மரிஷா, ’’அறுவைசிகிச்சை முடிந்தவுடன் குழந்தை பிறந்த கையோடு, என் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு இஸ்லா பிறந்த செய்தியைச் சொன்னேன்.

இந்த உணர்வு அற்புதமானது. இதுவரை சந்திக்கவே செய்யாத நண்பர்கள், எங்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை அளித்தது ஆச்சர்யமாக இருக்கிறது.

எனக்காக நிதியுதவி செய்தவர்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன்’’ என்று நெகிழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x