இராக்கை தொடர்ந்து சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

இராக்கை தொடர்ந்து சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
Updated on
1 min read

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிலைகள் மீது அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து வான் வழித்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

ஐ.எஸ். மீதான தாக்குதலை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுடைய தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் போர் விமானங்களை ஈடுபடுத்தியுள்ளோம். இதில் ஐ.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலை நடத்தும் முடிவை நேற்று முன்தினம் அமெரிக்க மத்திய ராணுவ கமாண்டர் எடுத்தார். அதற்கு தலைமை ராணுவ கமாண்டர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தார்” என்றார்.

சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது விமானத்தாக்குதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. சிரியாவில் தற்போது ஐ.எஸ்.அமைப்பில் 31 ஆயிரம் பேர் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு சிரியாவின் கிழக்குப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதோடு, இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசூல், திக்ரித் நகரங்களையும் ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது.

சிரியா அரசுக்கு தகவல்

சிரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இத்தாக்குதல் குறித்து ஐ.நா.வுக்கான சிரியா பிரதிநிதிகளிடம் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் வடக்கே ரக்கா பகுதியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் பலி

இதனிடையே சிரியாவின் மேற்கு அலெப்போ பகுதியில் பதுங்கியிருந்த அல் காய்தா அமைப்பினர் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியதில், அங்கிருந்த 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை சிரியாவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான சதிச்செயலில் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in