

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது விரைவில் அதிபர் தேர்தல் வரலாம் என்றும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் அவர்களிடம் சூசகமாக கூறியதாகத் தெரிகிறது.
இலங்கை சுதந்திர கட்சியின் (எஸ்எஸ்எப்பி) தலைவராக உள்ள சிறிசேனா, கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை தனது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயாலளர் ரோஹன லட்சுமண் கூறும்போது, “கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மறு கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு சிறிசேனா அறிவுரை வழங்கினார்” என்றார்.
எனினும், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த சிறிசேனா திட்டமிட்டிருப்பதாகவும் இதுகு றித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் இலங்கையிலிருந்து வெளி யாகும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு சிறிசேனா தனது கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் 5 ஆண்டு களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இதன்படி, 2020 ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதாவது இப்போதைய அதிபரின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சவை பிரதமராக்கினார். ஆனால், நாடாளுமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத்தை சிறிசேனா கலைத்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வேறு வழியின்றி ராஜபக்ச பதவி விலகினார். ரணில் மீண்டும் பிரதமரானார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்தான் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.