

அமெரிக்காவில் கொஞ்சமும் அரசியல் அனுபவம் இல்லாமலேயே அதிபரானவர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்லாமல் தனது நிர்வாகத்தில் பணிபுரிகிறவர்கள் மற்றும் சொந்த கட்சிக்காரர்கள் மீதும் சமூக ஊடகங்கள் மூலம் ஏளனம் செய்வதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளார். இவர் தனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகிறவர்கள் சிலரை தண்டித்துள்ளார். மேலும் சிலர் பதவி விலகி வருகின்றனர். இதனால் அவரது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வெளியுறவு விவகாரங்கள் குறித்து குறைவான அளவே தெரிந்திருந்தபோதி லும், தனக்கு எல்லாமே தெரியும் என ட்ரம்ப் நம்புகிறார். அதனால்தான், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் சமீபத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது என்ற ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் மேட்டிஸ் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ட்ரம்பின் இந்த முடிவால், நட்பு நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்றும் ஐஎஸ் மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புகள் மேலும் வலுவடையும் என்றும் மேட்டிஸ் கருதுகிறார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ இந்தியா கணிசமாக முதலீடு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் அங்கிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதால், தலிபான் தீவிரவாதிகளும் பாகிஸ்தானும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். தீவிரவாதம் மேலும் வளரும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டிஸ் அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதிலிருந்தே ட்ரம்புக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் நிறைய வாக்குறுதி கொடுப்பார். ஆனால் அதைச் செயல்படுத்தமாட்டார். எனவே, இந்திய அரசு அமெரிக்க அதிபருடனான உறவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ட்ரம்ப் அதிபரான பிறகு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிலர் பதவி விலகினர். இப்போது பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகி உள்ளார். ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இயக்குநர் ஹோப் ஹிக்ஸ் பதவி விலகினர்.
இவை எதைப் பற்றியும் ட்ரம்ப் கவலைப்படவில்லை. இவ்வளவுக்குப் பிறகும் உண்மை நிலவரத்தை ஏற்கும் நிலையில் ட்ரம்ப் இல்லை. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் ராபர்ட் மியூலர் உட்பட அரசுக்கு ஆதரவாக செயல்படாத நீதித் துறையினர் மீதும் கடும் கோபத்தைக் காட்டி வருகிறார் ட்ரம்ப்.
பாதுகாப்பு அமைச்சர் மேட்டிஸ் பதவி விலக முன்வந்ததால் அமெரிக்க பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்ப 500 கோடி டாலர் நிதி கேட்டு அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான செலவின நிதி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. குறிப்பாக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் கொண்ட பிரதிநிதிகள் சபை செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் கொண்ட செனட் அவை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்களும், குடியரசுக் கட்சியின் எம்.பி.க்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து கடந்த 22-ம் தேதி அதிகாலை 12.01 மணியில் இருந்து அரசு நிர்வாகம் முடங்கி (ஷட் டவுன்) உள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு எதிர்க்கட்சியினர்தான் காரணம் என ட்ரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி உள்ள நிலையில் ட்ரம்புக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.
வாஷிங்கடனில் பணியாற்றிய பத்திரிகையாளர்