விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது எப்போது?- இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துக்கு உத்தரவு வந்தது

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது எப்போது?- இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துக்கு உத்தரவு வந்தது
Updated on
1 min read

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என்ற வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தை வந்தடைந்துள்ளது. இதுகுறித்து விரைவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிய விஜய் மல்லையா மீது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் புகார் அளித்தன. அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துகளையும் பரிவர்த்தனைகளையும் முடக்கியது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளி மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக இங்கிலாந்து அரசுடன் இந்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன்பேரில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்மா ஆர்புத்நாட் சில நாட்களுக்கு முன்னர் இறுதி தீர்ப்பை வழங்கினார். அதில், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி வந்த விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப எந்தத் தடையுமில்லை, இந்தத் தீர்ப்பு பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்படி நீதிமன்ற உத்தரவு இங்கிலாந்து உள்துறை அமைச்சக்திற்கு அனுப்பபட்டது. விஜய் மல்லையா தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வந்துள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. இந்த விஷயத்தில் அதிகபட்சமாக 2 மாதங்களுக்குள் உள்துறை முடிவெடுக்கும். விஜய் மல்லையா இரண்டு வாரங்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதன் பிறகே இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in