Last Updated : 01 Dec, 2018 12:32 PM

 

Published : 01 Dec 2018 12:32 PM
Last Updated : 01 Dec 2018 12:32 PM

அமெரிக்காவில் 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம்: கடந்த 4 ஆண்டுகளில் அதிகரிப்பு

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 7 ஆயிரத்து 214 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 296 பேர் பெண்கள் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் வட அமெரிக்க பஞ்சாப் அமைப்புக்கு(என்ஏபிஏ) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கலிபோர்னியாவில் செயல்பட்டுவரும் என்ஏபிஏ அமைப்பு, பஞ்சாபில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வருபவர்களுக்காகச் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து என்ஏபிஏ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ம் ஆண்டில் 2,306 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 146 பெண்கள். அடுத்த ஆண்டு 96 பெண்கள் உள்ளிட 2,971 இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு அதிகரித்தது. 123 பெண்கள் உள்பட 4 ஆயிரத்து 88 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டனர். கடந்த 2017-ம் ஆண்டில் 187 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 656 இந்தியர்கள் அடைக்கலம் கேட்டனர்.

இதுகுறித்து என்ஏபிஏ அமைப்பின் தலைவர் சத்னம் சிங் சாஹல் கூறுகையில், “ கடந்த இரு ஆண்டுகளில் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 25 லட்சம் ரூபாய் முதல் ரூ.30 லட்சம் வரை ஏஜென்டுகளிடம் அளித்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து விடுகிறார்கள்.

ஆனால், தற்போதுள்ள அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.

மேலும், சொந்த நாட்டில் குற்றங்கள், வன்முறையில் ஈடுபட்டுப் புகலிடம் கேட்பவர்களுக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், இனம், மதம், தேசியம், குறிப்பிட்ட சமூக குழுக்கள், அரசியல் ரீதியாகவும் விசாரிக்கப்பட்டபின்பே புகலிடம் தரப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x