

உலகில், ஒவ்வொரு 40 வினாடியிலும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஹாலிவுட்டின் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த செய்திகளை அடுத்து 3 வாரங்களுக்குப் பிறகு இந்த ஆய்வறிக்கையை ஐ.நா. அளித்துள்ளது.
மேலும் ஊடகங்கள் விலாவாரியாக தற்கொலைச் செய்திகளை வெளியிடுவதும் தற்கொலைகளை அதிகப்படுத்துவதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
"ஒவ்வொரு தற்கொலையும் ஒரு துன்பமே. 800,000 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒவ்வொரு சாதாரண மரணத்திற்கு முன்னரும் தற்கொலை முயற்சிகள் பின்னணியில் இருக்கின்றன” என்று 10 ஆண்டுகாலம் இது பற்றி ஆராய்சி நடத்திய உலகச் சுகாதார மையத் தலைவர் மார்கரெட் சான் கவலை வெளியிட்டுள்ளார்.
ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதன் தாக்கம், அந்தக் குடும்பம், நட்பு வட்டாரம், அவர் சார்ந்த சமூகம் ஆகியவற்றில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வசதி படைத்த உள்ள நாடுகளில் தற்கொலைகள் சற்றே கூடுதலாக உள்ளது. அதாவது இத்தகைய நாடுகளில் 1 லட்சம் பேர்களில் 12 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வசதி குறைவான நாடுகளில் தற்கொலை அதிகம் என்றாலும் வசதி படைத்த நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
மொத்தத் தற்கொலைகளில் தெற்காசிய நாடுகளான, இந்தியா, இந்தோனேசியா, வடகொரியா மற்றும் நேபாளம் மூன்றில் ஒரு பங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் முறைகளில் பூச்சி மருந்து, தூக்கிட்டுக் கொள்ளுதல், ஆயுதப் பயன்பாடு ஆகியவை பெரிதும் பங்களிப்பு செய்தாலும் ஆசிய நாடுகளில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வது பிரதானமான முறையாக இருந்து வருகிறது.
இதில் ஆண்களின் தற்கொலை பெண்களின் தற்கொலையைக் காட்டிலும் இருமடங்கு அதிகம்.அதிக தற்கொலை நடக்கும் நாடுகளில் கயானா முதன்மை வகிக்கிறது. இங்கு 1 லட்சம் பேரில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர். வடகொரியா, தென் கொரியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதற்கு அடுத்த இடத்தில் இலங்கை இங்கு 1 லட்சத்தில் 28 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்தியாவில் லட்சத்தில் 21 பேர் தற்கொலையால் மடிகின்றனர்.
வசதி படைத்த நாடுகளில் மன உளைச்சல், சோர்வு காரணமாக 90 சதவீதத்தினர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியா, சீனாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் மன உளைச்சல், சோர்வு காரணமாக தற்கொலையைத் தேர்ந்தெடுப்பவர்கள் 60 சதவீதம்.
வசதி படைத்த நாடுகளாக இருந்தாலும் ஏழை நாடுகளாக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தில் பொருளாதார நிலைகளில் மிகவும் பின் தங்கியவர்களே என்று கூறுகிறது இந்த ஆய்வு.
சில ஏழை நாடுகளில் மருத்துவ வசதியின்மை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது.
தற்கொலைகளைத் தடுக்கலாம் என்று கூறும் உலகச்சுகாதார மையத் தலைவர், “தற்கொலைச் செய்திகளை ஊடகங்கள் எந்த வித உணர்வுமின்றி பரபரப்பு மனோபாவத்துடன் வெளியிடுகிறது. குறிப்பாக புகழ்பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், அதனை விலாவாரியாக விவரிக்கின்றனர், விசித்திரமான தற்கொலை முறைகளையும் விவரித்து வெளியிடுகின்றனர். எந்த விதத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதை விவரித்து புகைப்படத்தையும், முடிந்தால் வீடியோவையும் வெளியிடுகின்றனர். அனைத்தையும் விட குறிப்பிட்ட சூழ்நிலையில் தற்கொலை சரியே என்ற தொனியில் ஏற்றுக் கொள்ளகூடிய ஒன்று என்ற விதத்திலும் கருத்துக்களை உருவாக்குகின்றனர்” என்று சாடியுள்ளார்.