

ஹாங்காங்கில் சீனாவின் கட்டுப்பாட்டை எதிர்த்தும் வெளிப்படையான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதை வலியுறுத்தியும், ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டனின் காலனியாதிக்கத்திலிருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஹாங்காங்கில் ஒரு நாடு இரு ஆட்சி முறை அமலில் உள்ளது. அதாவது ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியை சீன அரசுதான் தேர்ந்தெடுக்கும். பாதி சுயாட்சி என்ற அடிப்படையில்தான் ஹாங்காங் நிர்வாகம் இருந்து வருகிறது.
இதை எதிர்த்து, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, ஹாங்காங் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாகவே ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வரும் 2017-ம் ஆண்டு தேர்தல் மூலம், ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்ந்தெடுக்கப்படுவார் என சீன அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், போட்டியிடும் வேட்பாளர்களை சீன அரசுதான் தேர்ந்தெடுக்கும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹாங்காங்கில் சீன அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள், ஹாங்காங்கில் வெளிப்படையான தேர்தலை வலியுறுத்தி நேற்று முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக, ஆசிரியர்கள், பொதுமக்கள், வர்த்தகர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஹாங்காங்கின் முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். ஆசியாவின் பெரும்பணக்காரரான லி கா ஷிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் 60-க்கும் மேற்பட்டோர், அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து, ஜனநாயக மறுசீரமைப்பு குறித்து விவாதித்து வருகின்றனர்.
ஹாங்காங் என்பது நிதித் தலைமையகம். பிரதான நிதி மாவட்டம் சீர்குலைந்தால், ஹாங்காங் பாழாகிவிடும் என, பெரும் கோடீஸ்வரரும், ரியல் எஸ்டேட் அதிபருமான லீ சாவ் கீ தெரிவித்துள்ளார். இப்போராட்டத்தில் மாணவர்கள் இணைந்திருப்பது பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இவ்வாரம் முழுக்க அரசு தலைமை அலுவலகத்துக்கு அருகிலுள்ள பூங்காவில் தினமும் திரண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
‘பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், சட்டப்பேரவை சீரமைப்பு ஆகியவற்றுக்கு சீன அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்’ என ஹாங்காங் மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. 380 கல்வியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.