

கவுரவமிக்க ‘வில்லியம் ஃபுல்பிரைட் ஃபாரின் ஸ்காலர்ஷிப் போர்டு’ உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணீஷ் கே கோயலை நியமித்து அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ஃபுல்பிரைட் இந்த வாரியத்தை கடந்த 1946-ம் ஆண்டு தோற்றுவித்தார். கல்வி, ஆய்வு, பரிசோதனை முயற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் போட்டியின் மூலம் நிதியுதவி பெறலாம்.
அமெரிக்க குடிமக்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் இந்த ஊக்கத் தொகையைப் பெற முடியும். இது ஃபுல்பிரைட் திட்டம் என அழைக்கப்படுகிறது. மொத்தம் 155 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன்பெற்றுள்ளனர். உலகின் மிக கவுரவம் மிக்க விருதுகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களில் 53 பேர் நோபல் பரிசும், 78 பேர் புலிட்ஸர் விருதுகளையும் வென்றுள்ளனர். பெரும்பாலான நோபல் பரிசு பெற்றவர்கள், அதற்கு முன்பாக ஃபுல்பிரைட் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் ஃபுல்பிரைட் ஃபாரின் ஸ்காலர்ஷிப் போர்டின் 12 உறுப்பினர்களில் ஒருவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணீஷ் கே கோயலை நியமித்து ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
கோயல் ஈவன்ட் மார்க்கெட்டிங் நிறுவனமான எம்கேஜி-யின் நிறுவன உரிமையாளர் ஆவார். இவர் அமெரிக்க இந்திய அறக்கட்டளையிின் அமெரிக்க ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.