

வங்கதேசத்தில் நேற்று நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் ஹேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கூட்டணிக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கிறார்.
வங்கதேசத்தில் இதுவரை 4-வதுமுறையாக யாரும் பிரதமராக வந்ததில்லை என்பதால், ஷேக் ஹசினா புதிய வரலாறு படைக்க உள்ளார்.
ஆனால், தேர்தல் முறையாக நடக்கவில்லை, நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றியுள்ளன.
வங்கதேசத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச நாடாளுமன்றத்தில் உள்ள 300 இடங்களில் 299 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அதன்பின் இரவில் இருந்தே வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது.
தேர்தலையொட்டி6 லட்சம் போலீஸார், துணை ராணுவப்படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.இந்த பாதுகாப்பையும் மீறி, 8 மாவட்டங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. பல்வேறு இடங்களில் அவாமி லீக் கட்சியினருக்கும், வங்கதேச தேசிய கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், வாக்குப்பதிவு மையங்களில் இடையூறு செய்துவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்பட மொத்தம் 17 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அவாமி லீக் கூட்டணி மாபெரும் முன்னிலையில் சென்றது. கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா 2,29,539 வாக்குகள் பெற்று வெற்று வெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிஎன்பி வேட்பாளர் 123 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
வங்கதேச தேர்தல் ஆணைய செயலாளர் ஹீலல் உதின் அகமது கூறுகையில், “ ஷேக் ஹசினா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி 288 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி 6 இடங்களில் மட்டுமே வென்றது” எனத் தெரிவித்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் வரவேற்கவில்லை, மறுதேர்தல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் கமல் ஹூசைன் கூறுகையில், “நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.