

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தரை வழியாக சென்று தாக்குதல் நடத்த அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன்.
ஏற்கெனவே ஒருமுறை இராக்கில் தரைவழி தாக்குதல் நடத்தி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் இப்போது மீண்டும் தரைவழி தாக்குதலுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒபாமா நிர்வாகம் யோசித்து வருகிறது.
சிரியா, இராக்கில் பல இடங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவரையும் பிரிட்டனைச் சேர்ந்த உதவிப் பணியாளரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்ததால் அத்தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இராக்கில் இப்போது ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டுமானால் இராக்கில் தரைவழியாக தாக்குதல் நடத்த வேண்டும் என்று பென்டகன் கருதுகிறது. இது தொடர்பாக ராணுவ ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், இராக்கில் அரசுப் படையினருக்கு ஆதரவாகவும் அமெரிக்க ராணுவம் அங்கு தரை வழி தாக்குதலை நடத்துவது அவசியம். இது தொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு பரிந்துரையை அனுப்ப இருக்கிறேன் என்றார்.
இராக்கில் தரை வழி தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஒபாமா நிர்வாகம் இதுவரை உறுதியாக தெரிவித்து வந்துள்ளது. முன்பு ஜார்ஜ் புஷ் ஆட்சியில் இராக்கில் தரைவழியாக தாக்குதல் நடத்தியதில் கிடைத்த மோசமான அனுபவமும் இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
அப்போது இராக் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று முக்கியமாக குற்றம்சாட்டி அந்நாட்டுக்குள் அமெரிக்க ராணுவத்தை புஷ் அனுப்பினார்.
ஆனால் கடைசி வரை இராக்கில் அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டதற்கான சிறு ஆதாரத்தைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதவிர இராக் தாக்குதல் அப்போது அமெரிக்காவுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக பின்னடைவையும் ஏற்படுத்தியது.
எனினும் இப்போது நிலைமை மாறியுள்ளது. அமெரிக்கர்கள் இருவரை தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்திருப்பதால் இதனை சுட்டிக்காட்டி அமெரிக்க மக்களிடம் இராக்கில் தரைவழி தாக்குதலுக்கான ஆதரவைப் பெற அரசு முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது.
இராக், சிரியாவுக்கு மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள், கிறிஸ்தவர்களையும் அவர்கள் கொலை செய்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் மிகக் கொடூரகொலை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து மனித வேட்டையாடி வருகின்றனர். எனவே இதனை தங்களுக்கு சாதகமாக கொண்டு இராக்கில் அமெரிக்கா தரை வழியாக களமிறங்கும் என்று கருதப்படுகிறது.-பிடிஐ