Published : 31 Dec 2018 02:23 PM
Last Updated : 31 Dec 2018 02:23 PM

இளம்பெண்ணைப் பலிவாங்கிய சிங்கம்: பணிக்குச் சேர்ந்த 2 வாரத்தில் நேர்ந்த பரிதாபம்

வடக்கு கரோலினாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள சிங்கம், 22 வயதுப் பணியாளரைப் பலி வாங்கியது. இதனையடுத்து சிங்கத்தைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

வடக்கு கரோலினாவில் உள்ள கேஸ்வெல் கவுண்டியில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக அலெக்சாண்டர் ப்ளாக் என்னும் 22 வயது இளம்பெண் பணியில் சேர்ந்துள்ளார்.

வழக்கமான தூய்மைப் பணிக்காக தனது குழுவினருடன் உள்ளே சென்றார் ப்ளாக். சரணாலயத்தில் இருந்த ஏராளமான சிங்கங்களில் ஒன்று, கூண்டில் இருந்து தப்பித்தது. அது மனிதர்கள் இருக்கும் இடத்துக்கு வந்தபோது, அங்கிருந்த ப்ளாக்கைக் கொன்றது.

மற்றவர்கள் மீது சிங்கம் பாயும் முன், அங்கிருந்த அதிகாரிகள் சிங்கத்தைச் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து சரணாலயத்தின் தரப்பில் கூறும்போது, ''பூட்டப்பட்ட அறையில் இருந்து சிங்கம் எப்படி வெளியே வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.

சிங்கத்தைச் சுட்டுக் கொல்லும் முன்னர், மயக்க மருந்து கொடுக்க முயற்சித்தோம். அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், வேறு வழியின்றி சிங்கத்தைக் கொன்றோம்'' என்று விளக்கம் அளித்துள்ளனர்.

கரோலினா மாகாணத்தில் உள்ள பர்லிங்டலினில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. சிங்கம் கொல்லப்பட்டதை அடுத்து, சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x