மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிய வளர்ப்பு நாய்க்கு கவுரவப் பட்டம்: அமெரிக்க பல்கலை வழங்கியது

மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிய வளர்ப்பு நாய்க்கு கவுரவப் பட்டம்: அமெரிக்க பல்கலை வழங்கியது
Updated on
2 min read

அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் வளர்க்கும் நாய் அவருக்கு பல்வேறு உதவி செய்து, பட்டம் பெறுவதற்கு துணையாக இருந்தமைக்காக அந்த நாய்க்கு பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது.

பிரிட்னி ஹாலே என்ற மாணவி வளர்க்கும் கிரிஃபின் என்கிற நாய்க்குத்தான் கிளார்க்ஸன் பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது.

நார்த் கரோலினா நகரைச் சேர்ந்தவர் பிரிட்னி ஹாலே. நார்த் கரோலினாவில் உள்ள கிளார்க்ஸன் பல்கலைக்கழகத்தில் ஆக்குபேஷனல் தெரபி பிரிவில் பிரிட்னி ஹாலே முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்.

பிரிட்னி ஹாலேவுக்கு முதுகுத்தண்டுவடப் பிரச்சினை இருப்பதால், பிறவியில் இருந்து எழுந்து நடக்க இயலாது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ‘கோல்டன் ரெட்ரீவர்’ இன நாய் ஒன்றை பிரிட்னி ஹாலே வளர்த்து வருகிறார். அதற்கு ‘கிரிஃபின்’ என்று பெயரிட்டுள்ளார்.

தான் வளர்க்கும் கிரிஃபின் நாய்க்கு பல்வேறு கட்டளைகளைக் சொல்லிக்கொடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பிரிட்னி சொல்வதை நாய் கிரிஃபின் தட்டாமல் கேட்டு, கீழ்ப்படிந்து நடக்கிறது.

காலை நேரத்தில் பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவைத் திறந்துவிடுதல், பிரிட்னியின் செல்போனை எடுத்து வருதல், ‘லைட் சுவிட்ச்சை’ ஆன் செய்தல், புத்தகத்தை எடுத்து வருதல் என சின்ன, சின்ன பணிகள் அனைத்தையும் கிரிஃபின் செய்து வருகிறது.

மேலும், பல்கலைக்கழகத்துக்கு பிரிட்னி வரும்போது அவரைப் பாதுகாப்பாக அழைத்து வருதல், அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளையும் கிரிஃபின் செய்து வருகிறது.

இந்தக் காரணங்களால் கிரிஃபினுக்கு கவுரவப் பட்டம் அளிக்கப்பட்டது. நியூயார்க்கில் உள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில் கிரிஃபினுக்கு கடந்த சனிக்கிழமை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பரிந்துரைத்தது. இதன்படி கடந்த சனிக்கிழமை கிளார்க்ஸன் பல்கலை கவுரவப் பட்டம் வழங்கியது.

இதுகுறித்து பிரிட்னி ஹாலே கூறுகையில், “நான் மட்டும் பட்டம் பெற்றால் போதாது, நான் வளர்க்கும் கிரிஃபினையும் பட்டம் பெறும் அளவுக்கு உயர்த்துவேன் என்று தீர்மானித்து வளர்த்தேன். இதன் படி நியூயார்க்கில் உள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை என்னுடைய நாய்க்கு கவுரவப் பட்டம் வழங்கிப் பரிந்துரைத்தது. அதன்படி, கிளார்க்ஸன் பல்கலை கவுரவப் பட்டம் வழங்கியது. எஜமானருக்கு மிகச்சிறந்த பணி, கட்டுப்பட்டு நடத்தல், அர்ப்பணிப்பு உணர்வுடன் இருத்தல், என்னுடைய படிப்பின் வெற்றி ஆகியவற்றுக்கு உதவியது என அனைத்தையும் கணக்கிட்டுப் பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் விர்ஜின் சிறைச்சாலையில் நாய் வாங்க நான் சென்றிருந்தபோது, கிரிஃபினைப் பார்த்து வாங்கினேன். பல நாய்கள் என்னிடம் வருவதற்கு, என் சக்கர நாற்காலியைப் பார்த்தும் அச்சமடைந்தன. ஆனால், கிரிஃபின் என்னிடம் வந்து பாசத்துடன் பழகி, என்னை முத்தமிட்டது. அப்போது இருந்து கிரிஃபின் என்னுடன் தான் இருக்கிறது.

என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் கிரிஃபினை தேடிச் சென்று பார்க்கின்றனர். விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர். வேறு எங்காவது நான் வேலைக்குச் சென்றால்கூட எனக்கும், கிரிஃபினுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வேலை வழங்கும் நிறுவனத்துக்கே வேலைக்குச் செல்லப் போகிறேன். கிரிஃபின் இல்லாமல் என்னால் எந்தப் பணியையும் செய்ய இயலாது “ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in